தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 24 Feb 2022 9:45 PM IST (Updated: 24 Feb 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

பள்ளம் சரி செய்யப்பட்டது

சென்னை பெரம்பூர் விவேகானந்தா நகர் 2-வது தெருவில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி ஆபத்தான நிலையில் இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மாநகராட்சி எடுத்த துரித நடவடிக்கையால் பள்ளம் சரி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அப்பகுதி பயணிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.



செடி கொடிகளில் சிக்கிய மின்கம்பம்

சென்னை செங்குன்றம் அன்னை இந்திரா நினைவு நகர், எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள மின்கம்பத்தின் அருகில் செடிகொடிகள் வளர்ந்து மின்கம்பத்தை சுற்றி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பத்தின் விளக்கு பல சமயங்களில் பழுதடைந்து எரிவதில்லை. மேலும் வீடுகளுக்கு செல்லும் மின்கம்பிகளில் இடையூறு ஏற்பட்டு அடிக்கடி மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதை மின்வாரியம் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.

- பொதுமக்கள், இந்திரா நகர்.

திறந்தவெளி கழிப்பிடம் தடுக்கப்படுமா?

சென்னை ஆவடி நேரு பஜார் காவலர் குடியிருப்பு அருகே நம்பெருமாள் பேட்டை 3-வது தெருவின் சாலை ஓரத்தில் அப்பகுதியில் இருக்கும் சிலர் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள், பெண்கள் அப்பகுதியை கடந்து செல்லும் போது முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. இதுபோல் அருவருக்க தக்க செயல்களில் ஈடுபடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், நம்பெருமாள்பேட்டை.

சிதைந்த நிலையில் நடைபாதை

சென்னை அசோக் நகர் ஜவஹர்லால் நேரு சாலை, பி.எஸ்.என்.எல். அருகே உள்ள நடைபாதையில் பாதாள சாக்கடை உடைந்த நிலையில் உள்ளது. பாதாள சாக்கடையோடு சேர்த்து நடைபாதையும் சிதைந்து இருப்பதால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் இடையூறாக இருக்கிறது. இந்த சாலையை மாநகராட்சி சீரமைத்து தர வேண்டும்.

- பாதசாரிகள், அசோக் நகர்.



குப்பைகளால் நிரம்பிய குளம்

சென்னை வில்லிவாக்கம் புத்தகரம், ராஜாமங்கலம் தெரு வெள்ளரித்தாங்கால் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் நிலையுள்ளது. இதற்கு சம்பந்தபட்ட துறை கவனித்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

- தெரு மக்கள்.

ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 8-வது மெயின் ரோடு 16-வது குறுக்கு தெரு ரேஷன் கடை அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டியில் மின்சார வயர்கள் ஆபத்தான நிலையில் மின் இணைப்பு பெட்டிக்கு மேலே கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே மின் வாரிய அதிகாரிகள் முன்எச்சரிக்கையாக இதை கவனித்து நிரந்தர தீர்வு வழங்கி வழி செய்ய வேண்டும்.

- தெரு மக்கள்.

பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும்

சென்னை கே.கே.நகரில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லை. மேற்கூரிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் வடபழனி அல்லது கிண்டிக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை பஸ் வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- உதயகுமார், எம்.ஜி.ஆர் நகர்.

கதவில்லாத கழிப்பிடம்

சென்னை கீழ்ப்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியில் இலவச கழிப்பிடம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ஆண்கள் கழிப்பிடத்தில் உள்ள கழிப்பறைகள் கதவுகள் இன்றி காணப்படுகிறது. பொது மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் கழிப்பிடம் என்பதால் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும்.

- சாஜித் பாஷா, அமைந்தகரை.

குப்பைத்தொட்டி வசதி கிடைக்குமா?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, சரஸ்வதி நகர் குடியிருப்பில் போதுமான அளவு குப்பைத்தொட்டி வசதி இல்லை. இதனால் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வசதி ஏற்படுத்தி தர ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

- பொதுமக்கள், ஆவடி.

சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

சென்னை சாலிகிராமம் பொன்னியம்மன் கோவில் தெரு வேலாயுதம் காலனி பிரதான சாலை மற்றும் தெருக்களில் சாலையோரம் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த வாகனங்களை ‘பார்' போல மாற்றி போதை ஆசாமிகள் மது அருந்துகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லவே பெண்கள், குழந்தைகள் அச்சம் கொள்கிறார்கள். எனவே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து வர வேண்டும்.

- சமூக ஆர்வலர்.





Next Story