உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் திண்டுக்கல், தேனி கல்லூரி மாணவர்கள்
போர் நடைபெற்று வரும் சூழலில் திண்டுக்கல், தேனியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கின்றனர். குண்டு வீசப்பட்டதால் பாதாள அறையில், தேனி மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல்:
கொடைக்கானல் மாணவி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷியாவின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர்.
போர் எதிரொலியாக உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் உக்ரைனில் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல், கொடைக்கானல், தேனியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன். தி.மு.க. பிரமுகர். அவருடைய மனைவி மாலதி. ஆசிரியை. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிந்தியா மோகன். இவர், கடந்த ஆண்டு உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு தாயகம் திரும்பினார்.
இளைய மகள் அனுசியா மோகன். தற்போது இவர், உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த நாட்டின் தலைநகரான கியூவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கிறார்.
தகவல் தொடர்பு துண்டிப்பு
பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து அனுசியா மோகன் தங்கியுள்ளார். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதால், தனது மகளை தொடர்பு கொண்டு ராஜ்மோகன் பலமுறை பேசினார்.
ஆனால் நேற்று காலை 11 மணி முதல் அவருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ராஜ்மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா திரும்ப டிக்கெட்
இதுகுறித்து ராஜ்மோகன் கூறியதாவது:-
என்னுடைய மூத்தமகள் மருத்துவ படிப்பை முடித்து திரும்பிய நிலையில், இளையமகள் இந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு திரும்புவதாக இருந்தது. உக்ரைனில் போர் மூளும் அபாயம் இருந்ததால், கடந்த மாதமே நாங்கள் அவரை தாய் நாட்டுக்கு திரும்பி வர சொன்னோம்.
ஆனால் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறி விட்டதால், அவர் அங்கேயே தங்கியிருந்தார். இருப்பினும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் இந்தியா திரும்புவதற்கு விமான டிக்கெட் எடுத்துள்ளோம்.
மீட்க நடவடிக்கை
இந்த சூழலில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், நேற்று காலை 11 மணி வரை அவரிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் அதன்பிறகு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அவருக்கு என்ன ஆனது என்ற தவிப்பில் உள்ளோம்.
என்னுடைய மகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கியுள்ளனர். ஆனால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவ-மாணவிகள், பத்திரமாக தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.
தேனி மாணவர்
இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் உக்ரைன் நாட்டில் படித்து வருகின்றனர். அதில், தேனி பங்களாமேடு திட்டச்சாலை பகுதியை சேர்ந்த சரவணன் மகன் ரோகித்குமார் (22) என்பவரும் ஒருவர் ஆவார்.
இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பு 3-வது ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் ரோகித்குமாரின் தந்தை சரவணன், தாய் வசந்தி ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர்.
அவர்கள் கலெக்டர் முரளிதரனை சந்தித்து உக்ரைனில் படித்து வரும் தனது மகனை பத்திரமாக மீட்டு தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.
பாதாள அறையில் தஞ்சம்
பின்னர் இதுகுறித்து ரோகித்குமாரின் தந்தை சரவணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனது மகன் உக்ரைனில் கார்கீவ் பகுதியில் படித்து வருகிறார். அவரை போன்று மேலும் சில தமிழ் மாணவர்கள், உக்ரைனில் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்து வருகின்றனர்.
4 மாதங்களுக்கு முன்பு எனது மகன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பின்னர் மீண்டும் உக்ரைனுக்கு சென்று படித்து வருகிறார். எனது மகன் வசிக்கும் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குண்டு வீசப்பட்ட சத்தம் கேட்டு அவர் எழுந்துள்ளார். உடனே எனது செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார்.
தற்போது அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் உள்ள பாதாள அறையில் சக மாணவர்களுடன் தஞ்சமடைந்து பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். இருந்தாலும் எங்களுக்கு பதற்றமாகவே உள்ளது.
பத்திரமாக மீட்க நடவடிக்கை
கடந்த 20 நாட்களுக்கு முன்பே விடுமுறையில் ஊருக்கு வந்து விடுமாறு அழைத்தேன். ஆனால், அங்கு போர் தொடுக்க வாய்ப்பு இல்லை என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறினர். இதனால் விடுமுறைக்கு வரும் முடிவை கைவிட்டு விட்டார்.
தற்போது போர் தொடங்கி உள்ளதால், எனது மகனை பத்திரமாக மீட்டு தரக்கோரி மனு கொடுத்துள்ளோம். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல் மாணவர்
இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் தேசிய மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். அந்த பகுதியிலும் ரஷியாவின் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவரின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர்.
உடனே வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் மாணவரை தொடர்பு கொண்டு பெற்றோர் பேசினர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், ரஷியா போர் தொடுத்த செய்தியை அறிந்ததும் மிகவும் கவலை அடைந்தோம்.
உடனடியாக வாட்ஸ்அப் வீடியோ காலில் எங்கள் மகனை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது கல்லூரி விடுதியில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். கல்லூரி நிர்வாகத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து இருப்பதாக கூறினார். ஆனால் மதியம் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறினார்.
இதனால் பதற்றம் அடைந்த நாங்கள் 20-க்கும் மேற்பட்ட முறை அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் எங்களுக்கு தைரியம் அளித்தார். எனவே மத்திய அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்றார்.
உக்ரைனுக்கு மாணவர்களை அழைத்து சென்ற நிறுவனம் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பெற்றோர் பேசி வருகின்றனர். தூதரகம் மூலம் நம்பிக்கையான பதில் கிடைத்தாலும், பெற்றோர் தவிப்பு அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story