சரணாலயம் அமைக்க தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கடவூர் வனப்பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்க தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
கரூர்
அழிந்து வரும் தேவாங்கு
கரூர் மாவட்டம், கடவூர் வனப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப்பகுதி தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சரணாலயம் அமைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஆயுத்த பணிகள் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கரூர் வன சரகத்திற்கு உட்பட்ட கடவூர் பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் நத்தம் வனச்சரகத்தில் அரிய வகை உயிரினமான தேவாங்கு உள்ளன.
அழிந்து வரும் தேவாங்கு இனமானது வன பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டவணை படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள புலி, சிங்கம் ஆகியவற்றின் வரிசையில் இடம் பெற்று உள்ளது. சிவப்பு நிற தேவாங்கு மற்றும் சாம்பல் நிற தேவாங்கு என இரண்டு வகையான தேவாங்குகள் இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. பாலூட்டி வகை விலங்குகளான தேவாங்கு 18 முதல் 28 சென்டி மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இவற்றின் எடை 85 முதல் 350 கிராம் மட்டுமே இருக்கும்.
கணக்கெடுக்கும் பணி
இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து இறை தேடும் பழக்கம் கொண்ட தேவாங்கு பல நேரத்தில் மரக்கிளைகளில் கூட்டமாக தங்கி வாழ்கின்றன மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை என்றாலும் மனிதர்களைப் பார்த்ததும் பதுங்கி விடுகின்றன. இவற்றின் ஆயுள் காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடிய அரிய வகை உயிரினங்களான தேவாங்கினை பாதுகாக்கும் வகையில் கடவூர் அய்யலூர் நத்தம் உள்ளடக்கிய பகுதிகளை ஒருங்கிணைத்து சரணாலயம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் அதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
கரூர் மாவட்டத்தில் கரூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட கடவூர் காப்பு காடுகளில் 78 பகுதிகள் அடையாளம் படுத்தப்பட்டு நேற்று முதல் பணி தொடங்கியது. நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் 9 மணி வரை தேவாங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. கடவூர் காப்புக்காடு பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதாக கூறினாலும் அதற்கான கணக்கெடுப்பு இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
நாளை வரை...
தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை அடுத்து திண்டுக்கல் மற்றும் கரூர் வனக் கோட்ட பகுதிகளில் கோவை மாவட்டம் ஆணைகட்டி சேக்கான் பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் வனத்துறையினர் உதவியுடன் இணைந்து முதல்முறையாக தேவாங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
அதற்காக 0.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேவாங்கு வாழும் பகுதிகளில் ஒரு கிரிடாக உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி 78 கிரிடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கிரிடுக்கு தலா 4 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு தேவாங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை இந்த கணக்கெடுப்பு நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
கணக்கெடுப்புக்கு பின் தேவாங்குகள் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story