தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குப்பைகள் அகற்றப்பட்டது
அனந்தன்நகரில் இருந்து வடக்கு கோணம் செல்லும் ஆற்றங்கரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மதகு பகுதியில் குப்பைகள் தேங்கி காணப்பட்டது. இதனால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கால்வாயின் மதகு பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி ெதரிவித்தனர்.
பாதுகாப்பு குறியீடு தேவை
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பனம் பகுதியில் ஆற்றூர் பிரதான சாலை செல்கிறது. இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் வேகமாக வரும் வாகனங்களால் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்கு வெகு நேரமாகிறது. மேலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, பாதசாரிகள் நலன் கருதி சாலையை கடந்து செல்ல பாதுகாப்பு குறியீடு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
கெடிகாரம் சரி செய்யப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சியின் அடையாள சின்னமாக மணிமேடை பகுதியில் மணிக்கூண்டு விளங்கி வருகிறது. இந்த மணிக்கூண்டில் அமைக்கப்பட்டுள்ள கெடிகாரம் பழுதாகி உள்ளது. மேலும், மணிக்கூண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, கெடிகாரம் நேரத்தை சரியாக காட்டும் வகையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-த.விசால், அனந்தபத்மநாபபுரம்.
பாதசாரிகளுக்கு இடையூறு
நாகர்கோவில் கேப் ரோட்டில் அண்ணா பஸ்நிலையம் அருகே சாலையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் எப்போதும் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
எரியாத விளக்குகள்
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகில் உள்ள அரசு துணை சுகாதாரநிலையத்தையொட்டி செல்லும் தெருவில் அமைந்துள்ள 2 மின் கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.
Related Tags :
Next Story