28-ந் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கும் நிலையில் திக்குறிச்சி மகா தேவர் கோவில் அருகே சாலை துண்டிப்பு


28-ந் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கும் நிலையில் திக்குறிச்சி மகா தேவர் கோவில் அருகே  சாலை துண்டிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 12:02 AM IST (Updated: 25 Feb 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கும் நிலையில் திக்குறிச்சி மகா தேவர் கோவில் அருகே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

களியக்காவிளை,
குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி சிவாலய ஓட்டம் தொடங்கும் நிலையில் திக்குறிச்சி மகா தேவர் கோவில் அருகே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
சிவாலய ஓட்டம்
குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளைெயாட்டி பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கு ஓடி சென்று வழிபடுவார்கள். இந்த ஆண்டு சிவாலய ஓட்டம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 
இந்தநிலையில், 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகா தேவர் கோவில் அருகே உள்ள வள்ளகடவு பகுதியில் மழை நீர் ஓடை சிறு பால பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. இந்த பணி தொடங்கப்பட்டு பல மாதங்களுக்கு மேல் ஆகியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பணிகள் முடிவடையாமல் உள்ளது. 
மறியல் முயற்சி
இந்த சாலை வழியாகதான் 3-வது சிவாலயத்திற்கு பக்தர்கள் செல்ல வேண்டும். மேலும், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலை பணிகளை உடனே முடிக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது. 
இதை கண்டித்து நேற்று இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் வள்ளகடவு பகுதியில் திரண்டனர். அவர்கள் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசாசோமன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியினர் சாலை மறியலை கைவிட்டு விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் குழிச்சல் செல்லன், மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரன், பொதுசெயலாளர் ராஜன், பாகோடு பஞ்சாயத்து தலைவர் முருகானந்த பிரசாத், திக்குறிச்சி பொறுப்பாளர் சுஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 2 நாட்களில் பணிகள் முடிக்கவில்லை எனில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். 

Next Story