தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனை
தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, இயற்கை உரம் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் இயற்கை உரம் தயாரிக்க தலா ரூ.20 லட்சம் மதிப்பில் வடக்குத்து, சிதம்பரம், கீரப்பாளையம், ஊ.கொத்தங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, வேப்பூர், ராமநத்தம் ஆகிய ஊராட்சிகளில் நுண்ணுயிர் உரக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
காய்கறி
இந்த மையங்களில் உரம் தயாரிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை சுற்றியுள்ள அங்காடிகள், கடைகள் ஆகியவற்றிலுள்ள காய்கறி விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்தது போக அடிபட்டவை, அழுகிப்போனவை மற்றும் விற்பனை செய்ய இயலாத நிலையில் உள்ளவைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
பின்னர் அவை இயற்கை உரம் தயாரிப்பதற்கான மையங்களில் உள்ள கொள்கலன்களில் கொட்டி, அதனை குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருந்து நொதிக்கச்செய்து இந்த இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது.
தரச்சான்று
மேலும் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தின் தரம், மாநில தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் பரிசோதிக்கப்பட்டு, ரசாயன உரங்களைவிட அதிக அளவு பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் உள்ளது என தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை உரத்தினை 1 கிலோ ரூ.10 வீதம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இன்று (அதாவது நேற்று) முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) அருண், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) தணிகாசலம், உதவி இயக்குனர் (பயிற்சி) விசாலாட்சி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) சேகர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி மற்றும் விவசாயிகள், சுய உதவி குழுவினர், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story