தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 25 Feb 2022 12:31 AM IST (Updated: 25 Feb 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கண்காணிப்பு கேமராவை தாங்கி நிற்கும் கம்பி சரி செய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் மேலவீதியில் ஒக்கூர் முக்கம் சந்திப்பில் கண்காணிப்பு கேமரா ஒன்று இரும்பு கம்பியில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த இரும்பு கம்பி கீழே சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கண்காணிப்பு கேமராவை தாங்கி நிற்கும் இரும்பு கம்பியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை

சாலையை பலப்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பட்டியிலிருந்து வடக்குத்தொண்டைமான்ஊரணி வரை உள்ள 4.8 கிலோ மீட்டர் பழுதடைந்த சாலை சரிசெய்யப்பட்டது. ஆனால் சாலையின் பக்கவாட்டில் சரிவர மண் அமைக்காமல் சாலை குறுகலாகவும், மேடு பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால் சாலையில் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் விலக முடியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் இரு பக்கமும் ஒரு மீட்டர் அகலத்திற்கு மண் போட்டு சாலையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை

ரெயில்வே கேட்டில் மேம்பாலம் வேண்டும்
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதை மூலம் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. அதனால் நொய்யல் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட ரெயில்வேத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுபதி, நொய்யல், கரூர். 

பூட்டியே கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் செலவில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டும் இதுவரை திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் எந்த சேவையும் நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் புன்னம்சத்திரம் சென்று பல்வேறு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். எனவே புன்னம் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தை திறந்து வைத்து சான்றிதழ்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டியன், புன்னம், கரூர்.

Next Story