கோட்டைப்பட்டினம் மீனவர் சடலமாக மீட்பு


கோட்டைப்பட்டினம் மீனவர் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:08 AM IST (Updated: 25 Feb 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

விசைப்படகு என்ஜினில் கோளாறு காரணமாக கடலில் குதித்த கோட்டைப்பட்டினம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கோட்டைப்பட்டினம், 
என்ஜினில் கோளாறு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஷாலினி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 42), சுந்தர பாலு (50), சந்தன குமார் (43) ஆகியோர் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது விசைப்படகில் உள்ள என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அதனை சரிசெய்ய சுந்தர பாலு கடலில் குதித்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் கடலில் இருந்து மேலே வராததால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் அவரை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பிணமாக மீட்பு
இதனைதொடர்ந்து அவர்கள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீனவர் சங்க நிர்வாகிகள் மீன் வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் மீனவர்கள் காணாமல் போன சுந்தர பாலுவை தேடினர்.
இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சிலர் கடலில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த உடலை மீட்டு பார்த்தபோது அது காணாமல் போன சுந்தர பாலு என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் குழுமத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சுந்தர பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story