உக்ரைனில் சிக்கித்தவிக்கும் செஞ்சி மருத்துவ மாணவர்
ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் செஞ்சி மருத்துவ மாணவரை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் வேலை நிமித்தமாக அங்கு சென்று தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதேபோல, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களும் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டுக்கு தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் காலனியை சேர்ந்த சேகர் - விஜயலட்சுமி தம்பதியரின் மகன் முத்தமிழன் (வயது 26) என்பவர் சென்றுள்ளார். அவர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.
அவர் அங்கு போர் நடந்து வரும் நிலையில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகிறார். ஆகவே அவரை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்று பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி சேகர் கூறியதாவது:-
குண்டு வெடித்தது
எனது மகன் முத்தமிழன் உக்ரைன் ரூபிஷின் என்ற இடத்தில் வினிஸ்டாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில் எனது மகன் முத்தமிழனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.
அப்போது எனது மகன், அவன் படிக்கும் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த 80 மாணவர்கள் படித்து வருவதாகவும், காலை 6.30 மணிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் குண்டு வெடித்ததாகவும் தெரிவித்தான்.
அழைத்து வர வேண்டும்
இதனால் அவர்கள் இருக்கும் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்கவும், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவும் கூட்டம் குவிந்ததாகவும் தெரிவித்தான். மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக கூறினான்.
எங்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே உணவு பொருட்கள் இருப்பதாகவும், போர் தீவிரமானால் உணவு பஞ்சம் ஏற்பட்டு விடும் என்றும் அவரது மகன் கூறியதாக சேகர் தெரிவித்தார்.
இது பற்றி சேகர் செஞ்சி தாசில்தார் மூலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், உக்ரைனில் தவிக்கும் தனது மகனை காப்பாற்றி தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் செஞ்சியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்துள்ளார்.
Related Tags :
Next Story