அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலத்தை ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் முற்றுகை
76 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்கக்கோரி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் தலைவர் பழமலை தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சகாதேவன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் சம்மந்தம் தொடக்க உரையாற்றினார். விழுப்புரம் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
கோரிக்கைகள்
2015 நவம்பர் மாதம் முதல் 2022 பிப்ரவரி வரை வழங்கப்பட வேண்டிய 76 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.100-ஐ ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாதந்தோறும் 1-ந் தேதியன்று பென்சனை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் கோவிந்தசாமி, இமயவரம்பன், லட்சுமிநாராயணன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேஷையன், சின்னராசு, கலியமூர்த்தி, பலராமன், வேணுகோபால், கணேசன், பக்தவச்சலம் உள்பட விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் விழுப்புரம் உபகிளை தலைவர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story