கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
குன்னூர் அருகே கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமானது.
ஊட்டி
குன்னூர் அருகே கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமானது.
ஆரம்ப சுகாதார நிலையம்
குன்னூர் அருகே கேத்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேம்படுத்தப்பட்ட இந்த நிலையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆவணங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
தீ பிடித்தது
இந்த நிலையில் நள்ளிரவு 1.45 மணியளவில் மருத்துவ உபகரணங்கள் இருந்த அறையில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மற்ற பொருட்களுக்கும் பரவியதால் மளமளவென பற்றி எரிந்தது. இதை பார்த்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மருத்துவ உபகரணங்கள் சேதம்
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், முழு பாதுகாப்பு கவச உடைகள், முககவசங்கள், கையுறைகள் போன்ற மருத்துவ உபகரணங்கள், சில ஆவணங்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அங்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தீ விபத்து ஏற்பட்ட அறைகளில் தடயங்களை சேகரித்தனர். இந்த ஆய்வுக்கு பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். மேலும் இந்த தீ விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story