கோத்தகிரியில் ஸ்பிரிங்ளர் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


கோத்தகிரியில் ஸ்பிரிங்ளர் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Feb 2022 8:35 PM IST (Updated: 25 Feb 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஸ்பிரிங்ளர் மூலம் பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

கோத்தகிரி

கோத்தகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஸ்பிரிங்ளர் மூலம் பயிர்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

காய்கறி சாகுபடி

கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இந்த பசுந்தேயிலைக்கு போதுமான விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தை பதப்படுத்தி கேரட், பீட்ரூட் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூர்கோல், டர்நாப்ஸ், பீன்ஸ், பூண்டு, மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். 

மேலும் சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த சல்லாரை, புரூக்கோலி, ஐஸ்பெர்க், சுகினி உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த பகுதியில் உறைபனி பொழிவு நிலவும் என்பதால் விவசாயிகள் தங்களது நிலத்தை தரிசாக வைத்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கோத்தகிரியில் உறைபனி தாக்கம் இல்லை. நீர்பனி பொழிவு மட்டுமே காணப்பட்டது. 

இதனால் கடந்த மாத இறுதி முதல் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை தயார் செய்து காய்கறி சாகுபடி செய்ய தொடங்கினார்கள். இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 

ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர்

இதனால் பயிர்கள் கருகுவதை தடுக்க ஸ்பிரிங்ளர் அமைத்து அதன் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக கோத்தகிரி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. 

ஆனால் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் இருந்து பயிர்களை ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீரை பயிர்கள் மீது தெளித்து வருகிறோம். இவை மழைபோன்று பயிர்களை மீது தண்ணீரை தெளித்து வருவதால் அவை கருகுவது இல்லை என்றனர்.


Next Story