தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலை சீரமைக்கப்பட்டது
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி‘தினத்தந்தி’புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதடைந்த சாலையை சீரமைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கரிமாணிக்கபுரத்துக்கும் ஆஸ்ராமத்துக்கும் இடையே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை சிலர் இரவில் கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பாலத்தின் இருபுறமும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உலகப்பன், கரிமாணிக்கப்புரம்.
விபத்து அபாயம்
ஆரல்வாய்மொழி, வடக்கூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவுவாயில் அருகில் சிலர் வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்தி உள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள் நடைபாதையை விட்டு விலகி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகனங்கள் மோதி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
தொற்று நோய் பரவும் அபாயம்
பூதப்பாண்டி வடக்கு தெருவில் புலிவீரன் குளம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகளை குளத்தின் கரைகளில் கொட்டுகின்றனர். இதனால், குளம் மாசடைவதுடன் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தின் கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
Related Tags :
Next Story