விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் சாவு


விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் சாவு
x
தினத்தந்தி 25 Feb 2022 10:49 PM IST (Updated: 25 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கொல்லங்கோடு, 
கேரளாவில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது கடலில் தவறி விழுந்த குமரி மீனவர் பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குமரி மீனவர்
கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த பனிதாசன் (வயது36) உள்பட 5 மீனவர்கள் கடந்த 23-ந் தேதி கேரள மாநிலம் நீண்டகரை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 24-ந் கரையில் இருந்து சுமார் 28 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் பனிதாசன் தவறி கடலுக்குள் விழுந்தார்.
உடனே சக மீனவர்கள் கடலுக்குள் குதித்து பனிதாசனை மீட்டனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
பரிதாப சாவு
இதனால், மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். நீண்டகரை துறைமுகத்தில் கரை சேர்ந்த அவர்கள் மீனவர் பனிதாசனை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
பின்னர், அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பனிதாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து பனிதாசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த பனிதாசனுக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story