1,330 குறள்களையும் முற்றோதல் செய்த 2 மாணவர்களுக்கு பரிசு
1,330 குறள்களையும் முற்றோதல் செய்த 2 மாணவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கி கவுரவித்தார்.
தூத்துக்குடி:
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என 2021-2022-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையின் போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் 1,330 குறள்களையும் முற்றோதல் செய்த 219 மாணவர்களில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் க.குணசீலன் மற்றும் தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவன் கி.விக்னேஷ் ஆகிய 2 பேரும் முற்றோதல் செய்து பரிசு பெற தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சம்சுதீன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story