நலத்திட்ட உதவிகளை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை
அனைத்துத்துறைகளின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனே வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், குடும்ப அட்டை பெறுதல், சிறு மற்றும் குறுந்தொழில் புரிவதற்கு வங்கி கடன் உதவி ஏற்படுத்துதல், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீட்டு திட்ட அட்டை பதிவு வழங்குதல், 4 சதவீத இடஒதுக்கீட்டின்படி வேலைவாய்ப்பு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்குதல், மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குதல் போன்ற அனைத்துத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள், நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்கள் உடனடியாக வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகள், பஸ்சிற்காக பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது, பஸ்களை முறையாக நிறுத்தி அவர்களை ஏற்றிச்செல்லவும், ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் பஸ்சை நிறுத்தி ஏற்றிச்செல்லவும், பஸ் நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு போக்குவரத்துக்கழகங்கள் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
மேலும் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக தார் சாலை அமைத்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைந்து கிடைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story