ஜேடர்பாளையம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை
ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பரமத்திவேலூர்:
வெல்ல ஆலை தொழிலாளர்கள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 25). இவருடைய மனைவி ராஜகுமாரி (22). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன், மனைவி 2 பேரும் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தில், சண்முகசுந்தரம் என்பவரின் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி, தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபகாலமாக ராஜகுமாரி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு மோகன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு விட்டத்தில் ராஜகுமாரி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன், ராஜகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜகுமாரி நேற்று காலை பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் ராஜகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசியும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story