குமாரபாளையம் அருகே துணிகரம்: விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ரூ.32 லட்சம், 60 பவுன் நகைகள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குமாரபாளையம் அருகே விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ரூ.32 லட்சம், 60 பவுன் நகைகள் திருடப்பட்டன. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குமாரபாளையம்:
விசைத்தறி உரிமையாளர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு விநாயகர் கோவிலை அடுத்து ஆர்.கே.எம். காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் தரைத்தளம், மேல்தளத்தில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இதில் தரைத்தளத்தில் விமல் (வயது 45) என்பவர், தனது மனைவி அனிதாவுடன் வசித்து வந்தார்.
விமல் விசைத்தறி வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தில், விசைத்தறி கூடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ரூ.32 லட்சம் திருட்டு
இந்தநிலையில் நேற்று முன்தினம் விமலின் உறவினரான ஓலப்பாளையம் கிழக்குக்காடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் இறந்து விட்டார். இதனால் துக்கம் விசாரிக்க விமல் தனது மனைவியுடன் ஓலப்பாளையம் சென்றார். பின்னர் நள்ளிரவு 2.30 மணிக்கு அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் இரும்பு கதவு, அதன் பின் இருந்த மரக்கதவின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.32 லட்சம், 60 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர்கள் குமாரபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் சீமாவும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதற்கிடையே விமல் வீட்டின் அருகே உள்ள ஜெயராம் என்பவர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் விமல் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களே, ஜெயராம் வீட்டிலும் பீரோவை உடைத்ததும், அதில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்ததும் தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
விமல் வீடு என நினைத்து மர்ம நபர்கள் ஜெயராம் வீட்டுக்கு சென்றதும், அதன் பின்னரே விமலின் வீட்டை அடையாளம் கண்டு திருட்டில் அவர்கள் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் 2 பேரின் வீடுகளிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் திருடர்கள் செயலிழக்க செய்திருப்பதும் தெரியவந்தது. இந்த துணிகர திருட்டில் விமல் குறித்து நன்கு தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். விசைத்தறி உரிமையாளர் வீட்டில் ரூ.32 லட்சம், 60 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story