உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Feb 2022 12:19 AM IST (Updated: 26 Feb 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு, 
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் பதற்றம்
வத்திராயிருப்பை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் அரவிந்த் கிருஷ்ணன் (வயது24). அதேபோல வத்திராயிருப்பை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரான  செல்லப்பாண்டியனின் மகன் ஹரிஷ்மணி (24). 
இவர்கள் இருவரும்  டாக்டர் படிப்புக்காக உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகின்றனர். 
இந்த நிலையில் ரஷிய நாட்டுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் இடையே தற்போது போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ள மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். போர் பதற்றத்தால் சரியான முறையில் சாப்பிட முடியாமல் தமிழகத்தை சார்ந்த மாணவ-மாணவிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
மீட்க வேண்டும் 
இந்த நிலையில் வத்திராயிருப்பை சேர்ந்த உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் உறவினர்கள், பெற்றோர் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். 
எனவே மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் 
ராஜபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ராஜகுமரன் (21). இவர் உக்ரைன் நாட்டில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். 
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கும் படி பாலமுருகன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Next Story