ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்


ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2022 1:17 AM IST (Updated: 26 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை, 

மதுரை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகவிலைப்படி

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 76 மாதமாக வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்க வேண்டும். 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தன்விருப்ப பணி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

அதன்படி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மண்டலங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பை சேர்ந்தவர்கள், நேற்று காலை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மண்டல தலைவர் ஆனந்தன் தலைமையில் போராட்டம் நடத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை மண்டல தலைவர் ஆறுமுகம், மாநில துணைப்பொதுச் செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன், போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

Next Story