உக்ரைனில் சிக்கி தவிக்கும் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள்


உக்ரைனில் சிக்கி தவிக்கும் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 26 Feb 2022 1:36 AM IST (Updated: 26 Feb 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

பெரம்பலூர்:

கண்ணீர் மல்க மனு
பெரம்பலூர் மாவட்டம், அரணாரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (எஸ்.பி.சி.ஐ.டி.) போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் கிருபா சங்கர் (வயது 21), சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமாரின் மகன் நவநீதகிருஷ்ணன் (22), பெரம்பலூரை சேர்ந்த அருண், வடக்கு மாதவி ரோடு சாமியப்பா நகரை சேர்ந்த கண்ணனின் மகன் ரோகித், தீரன் நகரை சேர்ந்த ரத்தீஷ், ரோஸ் நகரை சேர்ந்த சவுமியா உள்ளிட்ட 10 பேர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவி நகரில் தங்கி அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சார்பில் கிருபா சங்கரின் தந்தை முருகானந்தம், நவநீத கிருஷ்ணனின் அண்ணன் விக்னேஷ் ஆகியோர் கண்ணீர் மல்க நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
சொந்த ஊருக்கு அழைத்து வர கோரிக்கை
அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஹீரோவ் பிராட்சி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் மாணவர்கள், பொதுமக்கள் தங்கி உள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்கள் உள்ளிட்ட தமிழக மாணவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.
எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story