பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் குடிசை மாற்று வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு; அதிகாரி அறிவிப்பு


பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் குடிசை மாற்று வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு; அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 2:27 AM IST (Updated: 26 Feb 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் குடிசை மாற்று வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அதிகாரி அறிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் குடிசை மாற்று வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அதிகாரி அறிவித்து உள்ளார்.
1,072 வீடுகள்
ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு பிரிவின் மூலம் பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் பகுதிகளில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன. அந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அவை இடிக்கப்பட்டு தற்போது புதிதாக 1,072 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்க தயாராக உள்ளன. பெரியார் நகரில் இடிக்கப்பட்ட வீடுகள் 400. தற்போது 336 மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. பெரும்பள்ளம் ஓடை பகுதியில் 400 வீடுகள் இடிக்கப்பட்டதில் 464 பதிய வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. கருங்கல்பாளையத்தில் 272 வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக 272 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மொத்தம் 1,072 வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக 1,072 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
பதிவு செய்யலாம்
எனவே ஏற்கனவே இந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் அனைவருக்கும் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
இதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த வீடுகள் கேட்டு இன்னும் பலர் விண்ணப்பங்கள் வழங்காமல் உள்ளனர். பெரியார் நகரில் 363 பேர் மட்டுமே இதுவரை தங்கள் ஆளறி சான்றிதழுடன் விண்ணப்பித்து உள்ளனர். பெரும்பள்ளம் ஓடையில் 335 பேரும், கருங்கல்பாளையத்தில் 256 பேரும் பதிவு செய்து உள்ளனர். மீதம் உள்ளவர்கள் யார் என்கிற பட்டியல் வீட்டு வசதி அலுவலகத்தில் உள்ளது.
அதை சரிபார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் ஆளறி சான்றிதழுடன் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வீடு ஒதுக்கீடு வேண்டுபவர்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியத்தொகை போக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். மொத்தமாக செலுத்த முடியாதவர்கள் 8 சதவீதம் வட்டியில் 20 ஆண்டுகள் மாத தவணையில் செலுத்தும் வசதி உள்ளது. 6 மாதம் தவணை தவறாமல் செலுத்தினால் வட்டியில் 50 சதவீதம் தள்ளுபடி தரப்படும்.
30-ந் தேதி குலுக்கல்
எனவே ஏற்கனவே இடிக்கப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, புதிய குடியிருப்புக்காக ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பிக்காதவர்கள் வருகிற மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுவே கடைசி வாய்ப்பாகும். மார்ச் 30-ந் தேதி காலை 10 மணிக்கு சம்பத் நகர் கொங்கு மகாலில் 1,072 வீடுகளுக்கும் குலுக்கல் நடைபெற்று உரியவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் கூறி உள்ளார்.

Next Story