அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ்


அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 Feb 2022 2:46 AM IST (Updated: 26 Feb 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

வல்லம்;
தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
28 கட்டிடங்கள்
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளது. இதன் அருகே உள்ள தமிழக அரசின் திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை சாஸ்த்ரா பல்கலைகழகம் கட்டி உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதியுடன் காலக்கெடு முடிந்து விட்டது. அப்போது தாசில்தார் அருணகிரி, பல்கலைக்கழகத்திற்கு சென்று நிலத்தை அளவிடும் பணிகளை தொடங்கினார். 
கவர்னரிடம் மனு
பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து அப்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மாணவர்கள் படிக்கக்கூடிய நேரத்தில் இதுபோன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் கல்வி பாதிக்கப்படும் என மனு அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய தமிழக அரசு, ஐ.ஏ.எஸ்.அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. 
அறிக்கை தாக்கல்
இந்த குழுவினர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாத நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க. அரசு அந்த குழுவை கலைத்து விட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. 
இந்த குழுவினர் தஞ்சைக்கு வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.
நோட்டீஸ் ஒட்டப்பட்டது
இதன் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் நேற்று பல்கலைக்கழக நுழைவு வாசலில் ஒட்டப்பட்டது. பல்கலைக்கழக அலுவலர்களிடமும் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.     இந்த நோட்டீசை தஞ்சை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதற்கான செலவு தொகையை கல்லூரி நிர்வாகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story