அதிமுக வேட்பாளரின் உறவினர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பரபரப்பு
ஆரணியில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளரின் உறவினர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பரிசு பொருட்களை வாக்காளர்கள் வீதியில் வீசினர்.
ஆரணி
ஆரணியில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளரின் உறவினர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பரிசு பொருட்களை வாக்காளர்கள் வீதியில் வீசினர்.
பணம், பரிசு பொருட்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் வேட்பாளர்களின் உறவினர்கள் வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று வாக்காளர்களிடம் நீங்கள் எங்களுக்கு ஏன் ஓட்டு போடவில்லை என ஆவேசமாக கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வாக்காளர்களிடம் கொடுத்த பணம் மற்றும் பரிசு பொருட்களை திரும்ப தருமாறு கேட்டதாக தெரிகிறது.
வீதியில் வீசினர்
இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சேலை மற்றும் பரிசு பொருட்களை வீதியில் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அங்குள்ள சிலர் செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேட்பாளரின் தந்தை மற்றும் உறவினர்களிடம் இதுபோல சம்பவம் ஏதேனும் தெரிய வந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
சிறிது நேரத்தில் வேட்பாளரும் அவரது தந்தையும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஆரணி நகரில் பெரும் பரபரப்பு ஏற்படடது.
Related Tags :
Next Story