கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பும்போது என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்ததில் மீனவர் சாவு


கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பும்போது என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்ததில் மீனவர் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2022 7:43 PM IST (Updated: 26 Feb 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பும்போது என்ஜின் பழுதாகி படகு கவிழ்ந்ததில் மீனவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மீனவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மீன்பிடிக்க சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே செம்பாசிப்பள்ளி குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அன்பரசன் (வயது 22). இவர் இதே ஊரை சேர்ந்த தேசப்பன் மகன் தேனரசன் (22) என்பவருடன் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் காலை படகு மூலம் கடலுக்கு சென்றார்.

மீன்பிடித்து கொண்டு திரும்பி வரும்போது முகத்துவாரம் பகுதியில் படகின் என்ஜின் பழுதானதாக தெரிகிறது. பின்னர் ராட்சத அலையில் சிக்கிய படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. அன்பரசன் மற்றும் தேனரசன் கடலில் தத்தளித்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களும் வீடு திரும்பாததால் செம்பாசிபள்ளிகுப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை 15 பைபர் படகுகளில் கடலுக்கு சென்று அன்பரசன் மற்றும் தேனரசனை தேடி கொண்டிருந்தனர். இதனையடுத்து ஸ்ரீஹரிகோட்டா அருகே கடற்கரையில் ஒருவரது உடல் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது கரை ஒதுங்கியது அன்பரசனின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் காலில் பலத்த காயங்களுடன் செம்பாசிபள்ளிக்குப்பம் மீனவன் தேனரசன் தவித்து கொண்டு இருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய மீனவர் அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story