சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்த சூப்பிரண்டு


சைக்கிளில் சென்று போலீஸ் நிலையத்தை  ஆய்வு செய்த சூப்பிரண்டு
x
தினத்தந்தி 26 Feb 2022 8:19 PM IST (Updated: 26 Feb 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து வடமதுரைக்கு சைக்கிளில் சென்று, போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு செய்தார்.

வடமதுரை:

 சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி உடற்பயிற்சி, விளையாட்டு என தினமும் 50 நிமிடங்கள் செலவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்தநிலையில் நேற்று காலை திண்டுக்கல் சீலப்பாடி போலீஸ் மைதானத்தில் போலீசாருக்கான கூட்டு கவாத்து பயிற்சி நடந்தது. 

அதனை பார்வையிட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து சாதாரண உடை அணிந்து சைக்கிளில் சென்றார். கூட்டு கவாத்து பயிற்சியை ஆய்வு செய்த அவர், போலீசார் யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் சென்றார்.

 போலீஸ் நிலையத்தில் ஆய்வு 

காலை 7 மணிக்கு புறப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு, 8 மணி அளவில் வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் மகளிர் போலீஸ் நிலையத்திலும் அவர் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேட்டை பார்வையிட்டார். போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் புகார் கொடுக்க வருகிற பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டு்ம். போலீஸ் நிலையங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். 

திண்டுக்கல்லில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு, சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு செய்த சம்பவம் போலீசாரை திகைக்க வைத்துள்ளது.

Next Story