தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
மாநகராட்சியின் துரித நடவடிக்கை
சென்னை பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலை 4-வது தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால்வாயின் மூடி சரியாக மூடப்படாத நிலையில் இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு கழிவுநீர் வடிகால்வாய் மூடி சரி செய்யப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட மாநகராட்சிக்கும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
குடிநீரில் கலந்த கழிவுநீர்
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள சேனியம்மன் கோவில் தெருவில் இருக்கும் வீடுகளுக்கு வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து, கலங்கிய நிலையில் வருகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் குழந்தைகள் உட்பட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
- பொதுமக்கள்.
சாலை சீரமைக்கப்படுமா?
சென்னை தேனாம்பேட்டை கிரிசாலை கோட்டம் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் கவனித்து சாலையை சரி செய்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள்.
சேதமடைந்த கழிப்பறை கதவு
தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த கழிப்பறை வசதி உள்ளது. இருப்பினும் கழிப்பறையின் கதவு சேதமடைந்துள்ளதால் அதை கழற்றி வைத்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கதவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நூலக வாசகர்கள்.
முழுமையடையாத சாலை பணி; தீர்வு கிடைக்குமா?
சென்னை ஆவடி அன்னை சத்யாநகர் 8-வது தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சாலை வேலையானது முழுமையடையாமல் இருக்கிறது. இதனால் சீரான சாலை இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்படாததால் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக இதற்கொரு தீர்வு வழங்க வேண்டும்.
- தெரு மக்கள்.
பூங்கா திறக்கப்படுமா?
சென்னை போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது பூங்கா பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் நடைபயிற்சி செய்ய மக்கள் வேறு இடத்திற்கு சென்று வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?.
-தனுசு, காரம்பாக்கம்.
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பாலாஜி நகர் கீதா அடுக்குமாடி குடியிருப்பு பகுதி அருகில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தெருமக்கள்.
பழுதடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பெரம்னூர் புத்தர் தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பெயர்ந்து அபாயகரமான நிலையில் பழுதடைந்து காட்சியளிக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் அபாயம் இருப்பதால் மின்வாரியம் துரிதமாக செயல்பட்டு மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும்.
- பொதுமக்கள்.
தெருவில் தேங்கிய கழிவுநீர்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மொளச்சூர் கிராமம் காயிதே மில்லத் தெருவில் கழிவுநீர் தேங்கியபடி உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் என அப்பகுதியில் செல்லும் அனைவரும் இதை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே அதிகாரிகள் இதை கவனித்து தீர்வு வழங்க வேண்டும்.
- அக்பர் அலி, சுங்குவார்சத்திரம்.
குவிந்த குப்பைகள் அகற்றப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் குமணன்சாவடி பகுதியில் குப்பைகளை குவிந்து அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியே அலங்கோலமாக காணப்படுகிறது. இப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அவதிக்குள்ளாகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சாலைவாசிகள்.
Related Tags :
Next Story