தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 9176108888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
முழுமை பெறாத கால்வாய் பணி
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் அருகே பாப்பாத்தியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.
அந்தப் பணி ஒரு சில இடங்களில் முழுமை அடையாமல் உள்ளது. தெருவின் கடைசி பகுதியில் கால்வாய் பணி முழுமை பெறாததால் அங்குக் குளம்போல் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்து, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் பணியை முழுமையாக செய்து முடிப்பார்களா?
-மாதவன், வேலூர்.
பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
வாணியம்பாடி ஆம்பூர் செல்ல அரசு டவுன் பஸ்களில் ரூ.12 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் டவுன் பஸ்களில் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக அரசு பஸ்களில் ரூ.5 வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தனியார் பஸ்களில் ரூ.7 வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
-மு.திருமலை, வாணியம்பாடி.
சாய்ந்த மின்கம்பம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள ஆராசூர் கிராமத்தில் ஒரு மின்கம்பம் சாலையோரம் உள்ளது.
அந்த மின்கம்பம் சாய்ந்தபடி எந்நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான மக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள்.
மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க மின்வாரியத்துறையினர் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை செங்குத்தாக நட வேண்டும்.
-சக்திவேல், பொன்னூர்.
ஓய்வு அறையாக மாறிய காவல் உதவி மையம்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி மையத்தில் சில நேரங்களில் போலீசார் இல்லாததால் ஒரு சில நபர்கள் அந்த அறையை ஓய்வு எடுக்கும் அறையாக மாற்றி பொழுதைக் கழிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இந்தக் காவல் உதவி மையத்தில் நிரந்தரமாக போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
-மாலன், வேலூர்.
சாராய விற்பனை தடுக்கப்படுமா?
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடஆண்டாபட்டு ஊராட்சி பகுதியில் சாராய விற்பனை நடந்து வருகிறது.
இந்த ஊராட்சி எல்லைப் பகுதியில் காணும் இடமெல்லாம் சாராய பாக்கெட்டுகளாகவே கிடக்கின்றன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், திருவண்ணாமலை.
திருப்பத்தூரை அடுத்த குருசிலாப்பட்டு கிராமத்தில் பல ஆண்டுகளாக சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
தெருவில் ெபண்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுத்து சாராய விற்பனையை தடுத்து நிறுத்த ேவண்டும்.
-ராஜா, குருசிலாப்பட்டு
மூடி வழியாக வெளிேயறும் கழிவுநீர்
வேலூர் அண்ணாசாலையில் அமைக்கப்பட்டு உள்ள பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது கழிவுநீர், மூடி வழியாக வெளியேறி நடுரோட்டில் வழிந்தோடுகிறது. தெற்கு போலீஸ் நிலையம் எதிரில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்குமார், கஸ்பா-வேலூர்.
Related Tags :
Next Story