சித்தப்பாவை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய வாலிபர் கைது


சித்தப்பாவை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2022 11:54 PM IST (Updated: 26 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி அருகே சித்தப்பாவை கழுத்தை நெரித்துக்கொன்று தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் உளறியதால் அவர் போலீசாரிடம் சிக்கினார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பொறையாறு:
தரங்கம்பாடி அருகே சித்தப்பாவை கழுத்தை நெரித்துக்கொன்று தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் உளறியதால் அவர் போலீசாரிடம் சிக்கினார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தூக்கில் பிணம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 45). இவர் பொறையாறு தோட்டம் கீழவீதியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19-ந் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நாகராஜின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக சென்று இருந்தனர். நாகராஜ் மனைவி ராஜேஸ்வரி மகள் ஜெரினா ஆகியோர் வாக்களித்த பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது நாகராஜ் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
போலீசுக்கு தெரியாமல் உடல் அடக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் நாகராஜின் உடலை மறுநாள்(20-ந் தேதி) தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். 
குடிபோதையில் உளறிய வாலிபர்
இந்த நிலையில் நாகராஜின் அண்ணன் மகன் பாலசிகாமணி(33) நேற்று முன்தினம் குடிபோதையில் தனது சித்தப்பாவை கொன்றது நான்தான் என அப்பகுதியினரிடம் உளறியுள்ளார். 
சம்பவத்தன்று தனது சித்தப்பா நாகராஜை மது குடிக்க தான் அழைத்ததாகவும், அதற்கு சித்தப்பா தன்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்து அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன்பின்னர் துண்டால் கழுத்தில் சுற்றி ஜன்னலில் கட்டி விட்டதாகவும், அப்போது தானும் குடிபோதையில் இருந்ததாகவும் பாலசிகாமணி கூறியுள்ளார். 
உடல் தோண்டி எடுப்பு
இது குறித்து கேசவன்பாளையம் கிராம பஞ்சாயத்தார்கள் கொடுத்த தகவலின் பேரில் சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் முத்தையா பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், மகாலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட நாகராஜின் உடலை தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன் முன்னிலையில்  பொக்லின் எந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர்.
கைது
இதனைத்தொடர்ந்து பொறையாறு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஹபிசா சுல்தானா முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் நாகராஜ் உடலை மீண்டும் அடக்கம் செய்தனர்.  
மேலும் பாலசிகாமணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பரபரப்பு 
சித்தப்பாவை கொன்று அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய வாலிபர் குடிபோதையில் உளறியதால் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story