பட்டாசு கடையில் பதுக்கிய 204 கிலோ கஞ்சா பறிமுதல்


பட்டாசு கடையில் பதுக்கிய 204 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 27 Feb 2022 12:30 AM IST (Updated: 27 Feb 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பட்டாசு கடையில் பதுக்கிய 204 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மதுரையை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டாசு கடையில் பதுக்கிய 204 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மதுரையை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். 
வாகன சோதனை
விருதுநகர் அருகே ஆமத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் விருதுநகர்-சிவகாசி சாலையில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.
எனவே காரில் இருந்த மதுரை செல்லூரை சேர்ந்த சிவசாமி (வயது 32), சதீஸ்பாண்டி (22) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிவசாமியும், சதீஸ் பாண்டியும் உறவினர்கள் ஆவர். விசாரணையில் அவர்கள் இருவரும் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் கவலூர் அருகே சிவகாசியை சேர்ந்த ஜோதிராஜ் என்பவரின் பட்டாசு கடையை குத்தகைக்கு எடுத்து அதில் கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கியது தெரியவந்தது.
204 கிலோ கஞ்சா 
 உடனடியாக போலீசார் அந்த பட்டாசு கடைக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு மேலும் 89 பாக்கெட் கஞ்சா இருந்தது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் தோராயமாக 2 கிலோ கஞ்சா இருந்தது. 
மொத்தம் பட்டாசு கடையிலிருந்த 89 பாக்கெட் மற்றும் காரில் கடத்திய 5 பாக்கெட் ஆக மொத்தம் 94 பாக்கெட்டுகளிலும் 204 கிலோ கஞ்சா இருந்தது தொியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.23 லட்சம் என கூறப்படுகிறது.
2 பேர் கைது 
 மேலும் பட்டாசு கடையில் இருந்து விருதுநகர், மதுரைக்கு காரில் எடுத்துச்சென்று கஞ்சா விற்பனை செய்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அத்துடன் பட்டாசு கடையில் வைத்தால் போலீசாருக்கு சந்தேகம் வராது என்பதால் கஞ்சா பதுக்கலுக்கு பட்டாசு கடையை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கிடைத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆமத்தூர் போலீசார், சிவசாமி, சதீஸ் பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.  கார் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பட்டாசு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நேரடியாக வந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.

Next Story