கர்நாடக ஐகோர்ட்டில் ஹிஜாப் வழக்கு விசாரணையை, யூ-டியூப்பில் 33 லட்சம் பேர் பார்த்தனர்


கர்நாடக ஐகோர்ட்டில் ஹிஜாப் வழக்கு விசாரணையை, யூ-டியூப்பில் 33 லட்சம் பேர் பார்த்தனர்
x
தினத்தந்தி 27 Feb 2022 2:39 AM IST (Updated: 27 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த 11 நாட்களாக நடந்த ஹிஜாப் வழக்கு விசாரணையை யூ-டியூப்பில் 33 லட்சம் பேர் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

ஹிஜாப் வழக்கு விசாரணை

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தை தொடங்கினார்கள். அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் ஹிஜாப் அணிய தடை விதித்திருப்பதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. தற்போது விசாரணை முடிந்து தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

யூ-டியூப் சேனல்

   இதற்கிடையில், ஹிஜாப் விவகார வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் 11 நாட்கள் நடந்த போது, அதனை கர்நாடக ஐகோர்ட்டுக்கு சொந்தமான யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர். ஹிஜாப் விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்திருந்ததால், ஐகோர்ட்டில் நடந்த விசாரணையை பார்க்க லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி இருந்தது தற்போது தெரியவந்தது.

  அதாவது 11 நாட்களாக நடந்த ஹிஜாப் விசாரணையை யூ டியூப்பில் 33 லட்சம் பேர் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை 11 நாட்கள் ஐகோர்ட்டில் விசாரணை நடந்திருந்தது. இந்த 11 நாட்களில் 33 லட்சம் பேர் ஹிஜாப் விசாரணையை யூ-டியூப்பி பார்த்திருப்பதன் மூலம் கர்நாடக ஐகோர்ட்டு புதிய வரலாறு படைத்துள்ளது. வேறு எந்த கோர்ட்டுகளிலும் நடந்த விசாரணையை இத்தனை லட்சம் பேர் பார்த்ததில்லை.

ஒரு லட்சத்தை தாண்டியது

  கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணைகள், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த வழக்கு விசாரணைகளில், ஹிஜாப் விசாரணையை தான் அதிக அளவு மக்கள் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது.

  அத்துடன் கர்நாடக ஐகோர்ட்டின் யூடியூப் சேனலை பின்தொடருவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. வேறு எந்த ஐகோர்ட்டும் இந்த சாதனையை படைக்கவில்லை. அத்துடன் கர்நாடக ஐகோர்ட்டு போன்ற மற்ற சில ஐகோர்ட்டுகளில் இன்னும் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்புவது தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story