பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் நெல்லை மாநகராட்சி மன்றம்
மாநகராட்சி மன்றத்தில் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று தயார்படுத்தப்பட்டு உள்ளது
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. எனவே மாநகராட்சி மன்றத்தில் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று தயார்படுத்தப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந்தேதி நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி மற்றும் அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகளுக்கும், 17 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
பதவி ஏற்பு விழா
நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா, வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழா, நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்ட அரங்கில் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
எனவே கூட்ட அரங்கை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கூட்ட அரங்கின் உள்ளேயும், வெளியேயும் பெயிண்டு அடிக்கும் பணி நடைபெற்றது. மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கவுன்சிலர்கள் அமரும் நாற்காலிகள், மேஜைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும் அங்குள்ள குளிர்சாதன எந்திரங்கள், ஒலிபெருக்கி கருவிகள் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்த்து தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
மறைமுக தேர்தல்
தொடர்ந்து பதவி ஏற்கும் 55 கவுன்சிலர்களில் இருந்து மேயர், துணை மேயர் மற்றும் 4 மண்டல தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதற்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை), அதே மன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி, அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதேபோல் 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளிலும் பதவி ஏற்பு மற்றும் மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story