தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கோத்தகிரி அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
தீ விபத்து
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் சலீம் என்பவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீெரன தீப்பற்றியது. சிறிது நேரத்தில் மள மளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதை அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
6 மணி நேர போராட்டம்
அதன்பேரில் நிலைய அலுவலர்(பொறுப்பு) மாதன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் திடீரென தண்ணீர் காலியானது. பின்னர் குன்னூர் தீயணைப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கிடையில் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்ட தேயிலைத்தூளிலும் தீ பரவி எரிந்தது. தொடர்ந்து அங்கு வந்த கூடுதல் வாகனங்கள் மூலம் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக வீரர்கள் அணைத்தனர்.
விசாரணை
இந்த பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story