போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து கூறுகையில்,
தமிழக அரசின் தீவிர போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து அரசு துறை மற்றும் தன்னார்வல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் போலியோ சொட்டு மருந்து ஒரே தவணையாக வழங்கும் பணி நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் 800 சிறப்பு மையங்களும், நகர்ப்புறங்களில் 70 சிறப்பு மையங்களும் ஆக மொத்தம் 870 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த பணியில் 3,598 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, மாவட்ட பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்கு உட்பட்ட 15 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் ஒரு குழந்தைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் கவுரி, நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் நடந்த முகாம்களில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மன்னார்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி விஜயகுமார், அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி, உதவியாளர் ரீட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story