குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்
குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்
குண்டடம்
குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வறட்சியான பகுதி
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துவருகின்றனர்
இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது :-
குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துவருகிறோம், மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர் செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர் செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.
விலை வீழ்ச்சி
கடந்த சில மாதங்களாக சின்னவெங்காயம் கிலோ 50முதல் 70 வரை விற்பனையானதால் இந்த முறையும் நல்ல விலை கிடைக்கும் என கருதி இப்பகுதி விவசாயிகள் விதை மற்றும் காய் நடவு மற்றும் நாற்று நடவு என ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர் இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்துவருகின்றனர் தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பதால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். இந்தநிலையில் உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். மேலும் நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்யமுடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை. ஆகவே அரசு முன்வந்து உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story