குடவாசல் மாணவி குடும்பத்துக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல்
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் குடவாசல் மாணவி குடும்பத்துக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல் தெரிவித்து மாணவியை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.
குடவாசல்:
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் குடவாசல் மாணவி குடும்பத்துக்கு காமராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல் தெரிவித்து மாணவியை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.
மாணவர்கள் தவிப்பு
ரஷியா- உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் உக்ரைனில் மருத்துவம் படிக்்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என அவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார்முகமது. இவருடைய மகன் ஜெயினுல் ஆரிப் மற்றும் குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகள் அபிராமி ஆகியோர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறாார்கள். உக்ரைனில் தற்போது போர் மூண்டு உள்ளதால் இவர்கள் இருவரும் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர் மற்றும் மாணவியின் பெற்றோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காமராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்தநிலையில் நேற்று காமராஜ் எம்.எல்.ஏ. விஷ்ணுபுரத்தில் உள்ள அபிராமி வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாய், தந்தையிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் உக்ரைன் நாட்டில் உள்ள அபிராமியிடம், வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது மாணவி கூறுகையில்,
40 பேர் ஒரு சிறிய அறையில் தங்கி இருப்பதாகவும், ஒரு நாளைக்கு மட்டும் உணவு மற்றும் குடிநீர் உள்ளதாகவும், அடுத்த வேலைக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை உடனடியாக காப்பாற்றுங்கள் என்றார்.
தைரியமாக இருக்க வேண்டும்
இதற்கு எம்.எல்.ஏ. கூறுகையில், உக்ரைன் நாட்டில் தமிழகத்தில் உள்ள மாணவ- மாணவிகள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும், அனைவரும் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் செயலாளர் உதய சந்திரன், வெளிநாடு வாழ் தமிழர்கள் பாதுகாப்பு நல ஆணைய அதிகாரி ஆகியோருடன் காமராஜ் எம்.எல்.ஏ. தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ைரனில் சிக்கி தவிக்கும் விஷ்ணுபுரம் மாணவி அபிராமி, திருவாரூர் மாணவர் ஜெயினுல் ஆரிப் உள்ளிட்ட மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடு்த்தார்.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை
பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த மாணவ-மாணவிகள்அங்கு சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் குடவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் இருந்தனர்.
தி.மு.க. செயலாளர் ஆறுதல்
இதேபோல் விஷ்ணுபுரத்தில் உள்ள மாணவி அபிராமி வீட்டுக்கு குடவாசல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிராமன் நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.விடம் எடுத்துக்கூறி மாணவியை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பிரமணியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் விசுவநாதன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story