உக்ரைனில் சிக்கிய 8 மாணவர்களை மீட்க நடவடிக்கை
உக்ரைன் நாட்டில் சிக்கிய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் வேலை மற்றும் மருத்துவ படிப்பிற்காக அங்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு உயிர் பிழைக்க பாதாள அறையிலும், பதுங்கு குழியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.
வெளியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்பதால் வெளியே செல்ல முடியாமல் அவர்கள் அங்கேயே போதுமான உணவு இன்றியும், இடவசதி இன்றியும் தவித்து வருகின்றனர்.
உயிர் பயத்தில் அவர்கள், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களை மீட்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
8 மாணவர்கள் தவிப்பு
இந்த நிலையில் மருத்துவம் படிக்க சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள், உக்ரைன் நாட்டில் சிக்கி இருக்கும் தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த முத்தமிழன், ஹேமாவதி, சிறுமதுரை மோனிஷ், சித்தலம்பட்டு சரத்ராஜ், வளவனூர் சக்தீஸ்வர், கண்டமங்கலம் சசிகுமார், பனமலைப்பேட்டை அர்ச்சனா, பீரங்கிமேடு சாதனா ஆகிய 8 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்பது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 8 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
மீட்க நடவடிக்கை
இது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உக்ரைனில் சிக்கி இருந்தால் அவர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்துவர உதவிக்கும், தகவல்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தொழில்முறை படிப்புக்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றவர்களை மீட்டு தரும்படி இதுவரை 8 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு தெரிவித்து மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story