1 லட்சத்து 7 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


1 லட்சத்து 7 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 27 Feb 2022 11:45 PM IST (Updated: 27 Feb 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பெரம்பலூர், 
போலியோ சொட்டு மருந்து
தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
அரியலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். முகாமிற்கு அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 555 மையங்களிலும், 3 நடமாடும் மருத்துவக்குழு மூலமாகவும் 5 வயதிற்குட்பட்ட 63 ஆயிரத்து 583 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணிகளில் 2 ஆயிரத்து 305 பணியாளர்கள் ஈடுபட்டனர். முகாமில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கீதாராணி, மாவட்ட தொற்றா நோய் மருத்துவர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமினை பிரபாகரன் எம்.எல்.ஏ. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 387 மையங்களிலும், நடமாடும் மருத்துவக்குழு மூலமாகவும் 5 வயதிற்குட்பட்ட 44 ஆயிரத்து 218 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணிகளில் 1,548 பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன், மருத்துவமனை இருக்கை அதிகாரி கலா, தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் சுதாகர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) பணியாளர்கள் வீட்டிற்கு சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.

Next Story