கறம்பக்குடி பகுதியில் இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி பெற்றோர்கள் மகிழ்ச்சி
கறம்பக்குடி பகுதியில் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் இல்லம் தேடி கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடி:
கற்றல் மையங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சார்பில் கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த மையங்களில் மாலை நேரங்களில் கல்வி பயின்று வருகின்றனர். கறம்பக்குடி ஒன்றியத்தில் மட்டும் 420 இல்லம் தேடி கல்வி கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 420 தன்னார்வலர்கள் தலா 20 மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கற்றல் மையங்கள் அனைத்தும் பள்ளி வகுப்பறை சூழலை தாண்டி மாணவர்களின் மனமகிழ் நிகழ்வுகளுடன் நடத்தப்படுவதால் மாணவர்கள் இல்லம் தேடி கற்றல் மையங்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். ஆடல், பாடல், விளையாட்டு என குது கலத்துடன் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்களின் தனி திறனை கண்டறிந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தன்னார்வ ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
மகிழ்ச்சியாக உள்ளது
ஓவியம் வரைதல், கலை பொருட்களை உருவாக்குதல், சிற்பங்கள் செய்தல், டிசைனிங், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் என மாணவர்கள் அசத்தி வருகின்றனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் இல்லம் தேடி கற்றல் மையங்கள் களைகட்டி வருகின்றது. இந்த மையங்களுக்கு செல்ல மாணவர்கள் காட்டும் ஆர்வம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கறம்பக்குடி அக்ரஹாரம் இல்லம்தேடி கல்வி மைய மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி செல்லாத நாட்களிலும் இல்லம் தேடி கற்றல் வகுப்புகளுக்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்கின்றனர். அட்டையில் வீடு கட்டினேன், ஓவியம் வரைந்தேன், கதை சொன்னேன், ஆசிரியர் பாராட்டினார், மாணவர்கள் கைதட்டினார்கள் என தினமும் சந்தோஷத்துடன் குழந்தைகள் கூறும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களை புரிதலுடன் வழி நடத்தும் தன்னார்வ ஆசிரியர்களின் பணி பாராட்டுக்கு உரியது என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story