நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 6 பேர் கைது
நெல்லையில் இருந்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
நெல்லை:
நெல்லையில் இருந்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
மதுரை மண்டல உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர் உத்தரவின் பேரில், நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவண போஸ், மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று மதுரை - நாகர்கோவில் சாலையில் நெல்லை குறிச்சிகுளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக 13 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
6 பேர் கைது
உடனே லாரியில் இருந்த 7 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அதில் 6 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பகுதியை சேர்ந்த கலைஞர் (வயது 42), மாலைராஜா (20), சுரேஷ்குமார் (19), குமரி மாவட்டம் சரள்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (42), சங்கர்நகர் ராம்நகர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (29), ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (29) ஆகியோர் என்பதும், அவர்கள் லாரியில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கலைஞர் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல்
மேலும் அவர்களிடமிருந்து 13 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story