மாநகராட்சி, நகராட்சிகளில் ஏரியா சபை அமைக்க வேண்டும்


மாநகராட்சி, நகராட்சிகளில் ஏரியா சபை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Feb 2022 8:38 PM IST (Updated: 28 Feb 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி, நகராட்சிகளில் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்:

ஏரியா சபை 

மக்கள் நீதிமய்யம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் திருமூர்த்தி, மதுரை மண்டல நற்பணி இயக்க பொறுப்பாளர் சிவபாலகுரு, மாவட்ட பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் 2010-ன்படி மாநகராட்சி, நகராட்சிகளில் மக்கள் பங்கேற்கும் வகையில் எரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஆனால் சட்டம் கொண்டு வரப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும், இதுவரை விதிகள் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் 50 சதவீத மக்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளில் வாழ்கின்றனர்.

எனவே பிற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும். அதோடு அந்த அமைப்புகளுக்கு நிதி, அதிகாரம் வழங்க வேண்டும். 

அதன்மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எளிதாக நிறைவேற்ற முடியும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்க இருப்பதால் ஏரியா சபை, வார்டு கமிட்டி ஆகியவற்றை அமைக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

இதற்கிடையே திண்டுக்கல்லை அடுத்த மொட்டணம்பட்டி ஜெயலலிதாநகரை சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு, கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுவை போட்டனர். 

அந்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு 249 பேருக்கு மொட்டணம்பட்டி ஜெயலலிதாநகரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு வீடு கட்டி வசித்து வருகிறோம்.

ஆனால் எங்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர், பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள், எங்களுக்கு பகுதிக்கு வந்து திறந்தவெளியில் அமர்ந்து மது குடிக்கின்றனர். இதனால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே எங்கள் அடிப்படை வசதிகள் செய்து தருவதோடு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Next Story