ஊராட்சிகளுக்கான வருமானத்தில் ஆண்டுக்கு ரூ.100 கோடி முறைகேடு; தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு


ஊராட்சிகளுக்கான வருமானத்தில் ஆண்டுக்கு ரூ.100 கோடி முறைகேடு; தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Feb 2022 9:57 PM IST (Updated: 28 Feb 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கல் குவாரிகள் மூலம் ஊராட்சிகளுக்கான வருமானத்தில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை முறைகேடு நடப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.

தேனி:
தேனி மாவட்டத்தில் கல் குவாரிகள் மூலம் ஊராட்சிகளுக்கான வருமானத்தில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை முறைகேடு நடப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் நடந்த கூட்டங்கள், விழாக்கள் தொடர்பான செலவுகள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் சந்திரசேகரன், பாண்டியன், வளர்மதி, வசந்தா, தமயந்தி, இளம்வழுதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரூ.100 கோடி முறைகேடு
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் பாண்டியன் பேசும்போது, "எனது மனைவி வேல்மணி ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். எங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 கல் குவாரிகள் உள்ளன. அந்த குவாரிகள் மூலம் ஊராட்சிக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக வரவில்லை. ஊராட்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கான நடைச்சீட்டு கட்டணத்தில் 75 சதவீதத்தை ஊராட்சிக்கு செலுத்த வேண்டும். இதுகுறித்து தகவல் அறிய ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட கவுன்சிலர் என்ற முறையில் நானும் தேனி கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு விவரங்களை கேட்டபோது முறையான தகவல்களை கொடுக்கவில்லை. மேலும், எங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று தெரிந்தும் நாற்காலியில் அமரக்கூட விடவில்லை. நாங்கள் கேள்வி கேட்டபோதே அங்கிருந்த அதிகாரி எழுந்து சென்று அவமரியாதை செய்தார். எங்கள் ஊராட்சிக்கு கல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் வர வேண்டும். ஆனால், 4 ஆண்டுகளுக்கு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக தெரிகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் குவாரிகள் மூலம் ஊராட்சிகளுக்கு வர வேண்டிய வருமானத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி முறைகேடு நடக்கிறது. இதை விசாரிக்க வேண்டும்" என்றார்.
குவாரிகள் மீது நடவடிக்கை
அதற்கு பதில் அளித்து மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா பேசுகையில், "மாவட்ட ஊராட்சி கவுன்சிலரை அவமரியாதையாக நடத்தியது குறித்து மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்" என்றார்.
இதுதொடர்பாக துணைத்தலைவர் ராஜபாண்டியன் பேசுகையில், "மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலரை அவமதித்தது என்பது அவருக்கு வாக்களித்த மக்களையும், இங்கிருக்கும் அனைத்து கவுன்சிலர்களையும் அவமதித்ததற்கு சமம். மாவட்ட ஊராட்சிக்குழு மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு மேற்கொள்வோம். முறைகேடுகளில் ஈடுபடும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்துவோம்" என்றார்.

Next Story