கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 28 Feb 2022 10:39 PM IST (Updated: 28 Feb 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா அருகில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றி பேசுகையில்,  அ.தி.மு.க. 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெற்றது. 
சட்டமன்றத்தில் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய கட்சி அ.தி.மு.க. தமிழகம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு, கள்ள ஓட்டுப்போட்டு வெற்றிபெற்று இருக்கக்கூடிய தி.மு.க.வினர், இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, மறுதேர்தல் நடந்த வரலாறு, இந்தியாவிலேயே தமிழகத்தில் அதுவும் தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்துள்ளது. இதனையெல்லாம் தி.மு.க.வினர் நினைத்து பார்க்க வேண்டும். கரூர் நகராட்சியில் 48 நகர்மன்ற உறுப்பினர்களில் ஒரு நகர்மன்ற உறுப்பினரை மட்டும் பெற்ற வரலாறு தி.மு.க.விற்கு உள்ளது. 2011-ல் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாத சூழ்நிலைதான் தி.மு.க.விற்கு இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த கட்சி தி.மு.க. என்பதை மறந்து விடக்கூடாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்களால் கொடுத்த வெற்றி அல்ல, பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறுகிறார்கள். அப்போது அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி, என்றார்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான சின்னச்சாமி, மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலகண்ணன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story