கோவிலுக்கு கடத்திச் சென்று கட்டாய திருமணம்: சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


கோவிலுக்கு கடத்திச் சென்று கட்டாய திருமணம்: சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Feb 2022 5:15 PM GMT (Updated: 28 Feb 2022 5:15 PM GMT)

கோவிலுக்கு கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டு, சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


கடலூர், 

திட்டக்குடி சாத்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் செந்தில்குமார் என்கிற அசோக்குமார் (வயது 33). இவருக்கு திருமணமாகி செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். அதற்கு அந்த சிறுமி மறுத்தார்.

 இருப்பினும் செந்தில்குமார், அவரது மனைவி செல்லக்கிளி ஆகிய 2 பேரும் அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு 9.11.2019 அன்று கடத்திச்சென்றனர். பின்னர் அங்கு சென்றதும் அந்த சிறுமிக்கு செந்தில்குமார் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

10 ஆண்டு சிறை

இது பற்றி அந்த சிறுமி விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார், செல்லக்கிளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுமி கர்ப்பிணியாகி, ஒரு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது.

 இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். 

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் செந்தில்குமார் என்ற அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். செல்லக்கிளி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் 30 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும், செந்தில்குமார் என்ற அசோக்குமாரின் 3 பெண்குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் படிப்பு செலவுக்காக அரசின் நலத்திட்ட உதவிகளில் ஏதேனும் ஒரு உதவியை செய்யலாம் என்றும் அவர் தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story