மயானகொள்ளை திருவிழா கூட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்
மயானகொள்ளை திருவிழா கூட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மயானகொள்ளை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மயானகொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் எவ்வித அசம்பாதவிதமும் நிகழ கூடாது. இதனை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றங்கரையில் குடிநீர், மின்விளக்கு, கழிவறை வசதி, போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட வேண்டும். மேலும் திருவிழா அன்று அங்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். உதவிகலெக்டர்கள் மயானகொள்ளை திருவிழாக்குழுவினரை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். மயானகொள்ளை திருவிழா கூட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிக்க வேண்டும். மின்சாரம் சீராக வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதில், உதவிகலெக்டர்கள், தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story