கரும்பு வெட்டும் தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை
கரும்பு வெட்டும் தொழிலாளியை கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் தணிகைவேல் (வயது 31), இவருடைய பெரியப்பா மகன் சங்கர் (48). கரும்பு வெட்டும் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 2012-ல் கரும்பு வெட்டுவதற்காக திருச்சி மாவட்டம் கள்ளமேடு பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சில நாட்கள் கழித்து இருவரும் கப்பூருக்கு வந்தனர்.
இந்த சூழலில் கடந்த 20.2.2012 அன்று கரும்பு வெட்டும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தணிகைவேலுவுக்கும், சங்கருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தணிகைவேலை வெட்டியதில் அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார், சங்கர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story