அரிமளம் அருகே மீன்பிடி திருவிழா
அரிமளம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பருவமழை அதிக அளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி வழிந்த நிலையில் அவற்றில் நாட்டு மீன்கள் வளர்க்கப்படுகிறது. அவற்றில் ஒரு சில கண்மாய்களில் தண்ணீர் வற்றத்தொடங்கியுள்ளதால் கிராமமக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரிமளம் அருகே கே.செட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள செட்டி கண்மாயில் நீர் குறைந்ததால் பொதுமக்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதுகுறித்து சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் கிராமத்தார்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆர்வமுடன் பங்கேற்பு
அதன்படி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீன்பிடி திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் மீன்பிடி வலை மற்றும் வேட்டி-சேலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இளைஞர்களிடையே மீன்பிடிக்க ஆர்வம் அதிகமாக இருந்தது. பொதுமக்களும் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். பின்னர், தாங்கள் பிடித்த மீன்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story