பட்டதாரி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பட்டதாரி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 March 2022 1:27 AM IST (Updated: 1 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பட்டதாரி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பட்டதாரி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

காதல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூர் சுடலை மாடசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்சாமி (வயது 51). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி. இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், சுதா (22) என்ற மகளும் உள்ளனர்.

இதில் சுதா கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்து விட்டு, வீட்டில் இருந்து தாய்க்கு துணையாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அரிவாள் வெட்டு

இதை அறிந்த சுபாவின் வீட்டில் உள்ளவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சுதா காதல் திருமணம் செய்வது தொடர்பாக தனது தந்தை வேல்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வேல்சாமி, மகள் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுதாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சுதா தலையில் பலத்த காயம் அடைந்தார்.உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசில் சரண்

இதற்கிடையே, மகளை அரிவாளால் வெட்டிய வேல்சாமி அரிவாளுடன் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். 
போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story