2024-ம் ஆண்டுக்குள் இந்திய சாலைகளை தரம் உயர்த்த இலக்கு; நிதின் கட்காரி பேச்சு
அமெரிக்காவில் உள்ளது போல் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இந்திய சாலைகளின் தரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
பெலகாவி: அமெரிக்காவில் உள்ளது போல் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் இந்திய சாலைகளின் தரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள்
கர்நாடக அரசின் பொதுப்பணித்துறை-மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை ஆகியவை சார்பில் ரூ.3,972 கோடி மதிப்பீட்டில் 238 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பெலகாவி-சங்கேஸ்வரா, சங்கேஸ்வரா-மராட்டிய மாநில எல்லை வரை தேசிய நெடுஞ்சாலை, சோர்லா-ஜாம்போடி-பெலகாவி இடையே இருவழி பாதை, விஜயாப்புரா-முருகுன்டி மற்றும் சித்தாப்புரா-விஜயாப்புரா இடையே ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் உள்ள சாலைகளின் தரத்தை போல் இந்திய சாலைகளை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளேன். நாட்டின் சாலைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும், மாநிலங்களுக்கு இடையே பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உதவும்.
பாரத் மாலா திட்டம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்படும். நாட்டின் காற்று மாசுபாட்டை குறைக்க பசுமை வாகனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். பாரத் மாலா-2 திட்டத்தின் கீழ் கர்நாடகத்தின் பல பகுதிகள் சேர்க்கப்படும். புதிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள நில கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு வேகப்படுத்த வேண்டும். சென்னை-பெங்களூரு இடையே விரைவுச்சாலை அமைக்கப்படும். இதில் இரு நகரங்களுக்கு இடையேயான தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும்.
நீர் பாதுகாப்பு
இந்த நகரங்களுக்கு இடையே தொழில்நுட்ப மையத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். அதே போல் குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து சென்னைக்கு விரைவுச்சாலை அமைக்கப்படும். இந்த பகுதியில் தொழில் பூங்கா நிறுவப்படும். மராட்டியத்தில் உள்ள புனே மற்றும் பெங்களூரு இடையே 100 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பகுதியில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு திட்டங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு மாநில அரசு விரைவாக தீர்வு காண வேண்டும். அலமட்டி பிரச்சினையை இன்னும் தீர்க்காமல் இருப்பது துரதிர்ஷ்டம். விவசாய விளைபொருட்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.
மின்சாரம் தயாரிப்பு
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜல் சக்தி திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி ஓடும் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் கித்தூர்-பெலகாவி நெடுஞ்சாலையில் அமைக்கப்படும். இந்த சாலை மராட்டியம் மாநிலம் வரை செல்கிறது. வரும் நாட்களில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
சிறிய நீர்நிலைகளை ஏற்படுத்தி மழைநீரை சேமித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கர்நாடகத்தில் பாதாமி, பட்டதகல் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுடன் மராட்டியத்தில் உள்ள பந்தார்பூர், சீரடி உள்ளிட்ட ஆன்மில தலங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிதின் கட்காரியை பாராட்டுகிறேன்.
நிதி ஒதுக்கீடு
கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்வது போன்ற உதவிகள் செய்து தரப்படும். நிதின் கட்காரி மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, ஒரே நெடுஞ்சாலை திட்டத்தில் 58 மேம்பாலங்கள் அமைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்தார். கர்நாடகத்தில் ஒரு சாலையை தரம் உயா்த்த ஆண்டு கணக்கில் காலம் ஆனது. ஆனால் நிதின் கட்காரி மத்திய மந்திரியாக வந்த பிறகு கர்நாடகத்தில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story