பட்ஜெட்டில் ஆதிதிராவிடர்களுக்கு அதிக நிதி ஒதுக்க சித்தராமையா கோரிக்கை


பட்ஜெட்டில் ஆதிதிராவிடர்களுக்கு அதிக நிதி ஒதுக்க சித்தராமையா கோரிக்கை
x
தினத்தந்தி 1 March 2022 2:12 AM IST (Updated: 1 March 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

வருகிற பட்ஜெட்டில் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் சமூகங்களுக்கு நியாயப்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு: வருகிற பட்ஜெட்டில் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் சமூகங்களுக்கு நியாயப்படி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பல்வேறு திட்டங்கள்

கர்நாடகத்தில் மொத்த மக்கள் தொகையில் 24 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில கால் பங்கு இருக்கும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 2013-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஒரு சட்டம் கொண்டு வந்து அதன்படி நிதி ஒதுக்கீடு செய்தேன். 

கல்வி உதவித்தொகையும் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டது. எனது ஆட்சியில் அந்த சமூகங்களின் மக்களின் மேம்பாட்டிற்காக 40 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் பிறகு தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் அந்த மக்களுக்காக 7 திட்டங்கள் மட்டுமே அமல்படுத்தப்பட்டு உள்ளன.

புறம்போக்கு நிலம்

மேலும் எனது ஆட்சியில் 6,914 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் அரசின் புறம்போக்கு நிலம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 918 ஏக்கர் நிலம் அந்த சமூகங்களின் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட நிலையில் இந்த சமூகங்களின் மக்களை முன்னேற்றம் நோக்கத்தில் வருகிற பட்ஜெட்டில் அந்த மக்களுக்கு நியாயப்படியான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story